செவ்வாய், 22 ஜனவரி, 2013

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கேரளா இளைஞர் விடுதலை!


on 22 January 2013.

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கேரளா மாநில இளைஞர் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர் நாடு திரும்பியுள்ளார். சவூதி அரேபியாவில் அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மேற்படி கேரளா இளைஞருக்கு..., 

குவைத் சட்டம் மன்னிப்பு வழங்கியுள்ளது. குவைத்தில் மரணதருவாயிலிருந்த 32 வயதான சசி என்பவரே இவ்வாறு மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குவைத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த சசி, தன்னோடு பணிபுரிந்த சுரேஷ் என்பவரை கத்தியால் குத்திவிட அவர் மரணமாகியுள்ளார். இந்நிலையில், கொலைக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சசிக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.


கிரிக்கெட் போட்டியொன்று தொடர்பான சர்ச்சையில் ஏற்பட்ட கைகலப்பே இந்த மரணத்தை ஏற்படுத்தியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற போது சசிக்கு 26 வயதாகும். இந்நிலையில், சசிக்கு மரண தண்டனை விதித்த குவைத் நீதிமன்றம், மரணமானவரின் மனைவி மன்னிப்பு வழங்கினால் மட்டுமே சசியை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டது.


இந்த விவகாரம் தொடர்பில் தெரியவந்ததை அடுத்து கேரளாவின் எதிர்க்கட்சியிலிருந்த ஊமன் சண்டி, சசியைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார். குவைத்திலிருந்த தனது நண்பர்களைத் தொடர்புகொண்ட சண்டி, அவர்கள் மூலம் 10 இலட்சம் ரூபா நிதியைத் திரட்டினார். அத்துடன், ஆந்திர மாநில முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியும் 5 இலட்சம் ரூபாவினை வழங்கினார்.


இவ்வாறு திரட்டப்பட்ட நிதி, சம்பவத்தின் போது உயிரிழந்த சுரேஷின் மனைவியிடம் கையளிக்கப்பட்ட நிலையில், சசிக்கு மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், சசி மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவருக்கான சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆந்த சிறைத்தண்டனை முடிந்த நிலையில் அவர் இம்மாதம் விடுதலையானார்.


நாடு திரும்பிய அவர் ஆலப்புளாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் இணைந்துகொண்டார். அத்துடன், தனது விடுதலைக்காகப் போராடிய கேரளாவின் அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினரும் தற்போதைய கேரள முதலமைச்சருமான ஊமன் சண்டியையும் அவர் கடந்த புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.


நன்றி கூறுவதற்காக சசி, தனது வீட்டுக்கு வருகை தந்துள்ளார் என்று கேள்வியுற்றதும் முதலமைச்சர் ஊமன், தனது கூட்டத்தையும் விரைவில் முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அவமுதலமைச்சரைக் கண்டதும் ஓடிப்போய் அவரை ஆரத்தழுவிக்கொண்ட சசி கண்ணீர் விட்டு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். 'உங்களது முயற்சியினால்தான் நான் இன்று உயிரோடு உள்ளேன்' என்றும் கூறி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார் சசி.

eutamilar. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக